சம்மதத்துடன் உடலுறவு வைத்த பிறகு திருமணம் செய்ய மறுப்பது, பாலியல் வன்கொடுமையாகக் கருத முடியாது என்று சூரஜ் செஷன்ஸ் நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது. இந்நிலையில், அதே போன்று இன்னொரு வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இந்த வழக்கில், ஒரு பெண், தனது சக ஊழியர் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த 2019ம் ஆண்டு தனது சக ஊழியருடன் உறவில் இருந்ததாகவும், அவர் தனது பிறந்த நாள் விழாவில் தன்னிடம் போதைப்பொருள் கலந்த பானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய அவர், நான்கு வருடங்கள் கழித்து சாதி வேறுபாடு காரணமாக திருமணத்தை மறுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கை எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி அருண் குமார் சிங் தேஷ்வால் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது, இருவரும் நீண்ட காலமாக காதல் உறவில் இருந்தது நிரூபிக்கப்பட்டது.
அதனை அடுத்து, நீதிபதி கூறியதாவது: “நான்கு ஆண்டுகளாக இருவரும் சம்மதத்துடன் உறவில் இருந்தனர். பெண் ஆரம்பத்திலிருந்தே சமூகக் காரணங்களால் இந்த உறவு திருமணமாக முடியாது என்பதை அறிவார். இந்த சூழ்நிலையில், சம்மதத்துடன் நடைபெற்ற உடலுறவைக் கொண்டு பாலியல் வன்கொடுமை எனக் கூற முடியாது” என்றார். இதனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதே போன்று, சூரஜ் செஷன்ஸ் நீதிமன்றமும் கடந்த வாரம் இதே மாதிரியான வழக்கில் குற்றச்சாட்டு நிலைக்காது என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. காதல் உறவில் நீண்ட காலமாக இருவரும் சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தால், திருமணம் நடக்காத காரணத்தால் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிய முடியாது என இப்போது இரு நீதிமன்றங்களும் தெளிவாக கூறியிருப்பது, பல வழக்குகளுக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.
