உத்தரப்பிரதேசம் மாநிலம் அவுரையா மாவட்டத்தில் மனிதநேயத்துக்கும் நட்புக்கும் கருப்பு புள்ளியாக, 75 வயது முதியவர் ஒருவர் தனது நண்பரின் மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் சுமார் 5 மாதங்களுக்கு முன்பு நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர், பிசம்பர் தயாள் என்பவர், தனது நண்பரின் சிறுமி மகளை ‘பிரசாதம் ஊட்டுவதாக கூறி’ தனது வீட்டிற்கு அழைத்து சென்று, வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் பின்னர், சிறுமிக்கு பயம் ஏற்பட்டு, தனது மீதான வன்கொடுமையை யாரிடமும் தெரிவிக்கவில்லை. ஆனால், ஐந்து மாதங்கள் கடந்ததும், தனது கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பிறகு, அவள் முழு விபரத்தையும் தாயிடம் வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 12ஆம் தேதி, சிறுமியின் தாய் பிதுனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், பிசம்பர் தயாள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவரை போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி, காவல்துறையின் வழிகாட்டுதலின்படி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடைபெற்ற பரிசோதனையில், அவள் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக பிதுனா வட்ட அதிகாரி புனீத் மிஸ்ரா தெரிவித்ததாவது: “வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை முழுமையாக நடைபெற்று வருகிறது. குற்றவாளிக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளிக்கிறது,” என்றார்.
