திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடைபெற்ற கொலை சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறைத் தொடர்ந்து, 30 வயதுடைய ஆட்டோ டிரைவரை, அவரது மனைவியின் சகோதரர் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதாவது ஆரணி ஆரணிப்பாளையம் டி.ஆர்.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி (30). இவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் மோனிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை, ஆரணி அருகே உள்ள மொழுகம்பூண்டி என்ற கிராமப்பகுதியில், கணபதி பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீசார், உடனடியாக அங்கு வந்து கணபதியின் உடலை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, கணபதியின் மனைவி மோனிஷாவின் சகோதரர் மகேஸ்வரன் (24) அவரை கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கணபதிக்கும் அவரது மனைவி மோனிஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, மோனிஷா அவரை பிரிந்துசென்றிருந்தார். அதையடுத்து, தங்கள் குழந்தைகள், அவரது சகோதரர் மகேஸ்வரனின் வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். கணபதி குழந்தைகளை சந்திக்க காரணமாக அவ்வப்போது அங்கு சென்று வந்தார். இந்நிலையில், மோனிஷாவின் மற்றொரு சகோதரி கொழுந்தியாளுடன் கணபதி பழகியதோடு அவரை திருமணம் செய்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது.
மேலும் தன்னுடைய கொழுந்தியாளை தனக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என கணபதி கூறியதால் ஆத்திரத்தில் மகேஸ்வரன் மது போதையில் அவரை கொலை செய்தது தெரிய வந்தது. தற்போது போலீசார் மகேஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
