கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே வெங்கடசாமி – சல்லாபுரி தம்பதி வசித்து வந்தனர் . வெங்கடசாமி விவசாயியாக இருந்தார். இவர்களது கிராமத்தில் சிலர், வனவிலங்குகள் தாக்கி இறந்தால் அரசிடமிருந்து அதிக அளவில் இழப்பீடு தொகை கிடைக்கும் என்று பேசிக்கொண்டிருந்தனர். இதனைக் கேட்ட சல்லாபுரி, தனது கணவரை கொலை செய்து காட்டில் வீசிவிட்டால் பணம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டார். அதன்படி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் வைத்து வெங்கடசாமியை கொலை செய்தார். பின்னர், கணவரின் பிணத்தை எடுத்துச் சென்று வனப்பகுதியில் வீசிவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்தார்.
அதன்பிறகு, காவல் நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் தனது கணவரை காணவில்லை என்றும், வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது புலி அவரை கடித்துக்கொன்று வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றிருக்கலாம் என்றும் சல்லாபுரி தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடசாமியைத் தேடி வந்தனர். வயல்வெளியில் புலி வந்து சென்றதற்கான எந்த அடையாளமும் இல்லை என்பதால் கிராம மக்களுடன் சேர்ந்து போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் வெங்கடசாமியின் உடல் கிடந்தது. மேலும், அவரது உடலின் தோலின் நிறம் மாறியிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சல்லாபுரியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், காட்டு விலங்கு தாக்கி இறந்தால் அதிக அளவு அரசிடமிருந்து இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று நம்பி, கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து, உடலை வனப்பகுதியில் வீசியதாக சல்லாபுரி உண்மையை ஒப்புக்கொண்டார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சல்லாபுரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
