நெல்லை மாவட்டம், சுத்தமல்லி அருகே நரசிங்கநல்லூர் பொன்விழா நகரைச் சேர்ந்த அப்துல் வகாப் கோடீஸ்வரன் நகரில் கராத்தே வகுப்பும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையமும் நடத்தி வருகிறார். இவர் தனது பயிற்சி மையங்களுக்கு வரும் மாணவ-மாணவிகளின் தாய்மார்களை குறிவைத்து, ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை தனது வலையில் சிக்க வைத்து உல்லாசம் அனுபவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரால் சுமார் 8-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்டு, சிலர் தங்கள் வாழ்க்கையை இழந்ததாகவும், பயத்தால் புகார் அளிக்காமல் மௌனமாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், அப்துல் வகாபின் கராத்தே வகுப்பில் பயிற்சி பெற்று வந்த நிலையில் இவரது தாயை அப்துல் வகாப் தவறான நோக்கத்துடன் அணுகி, செல்போன் எண்ணைப் பெற்று, 4 ஆண்டுகளாக உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்ததும், அவர் மனைவியை கண்டித்ததால், அந்த பெண் அப்துல் வகாபுடனான தொடர்பை தவிர்த்து வந்தார். ஆனால், சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற அப்துல் வகாப், தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்காததற்காக அவரை தாக்கி, மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண் கூச்சலிட்டதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் கூடியதால் அவர் தப்பியோடினார்.

பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அப்துல் வகாப் பல பெண்களை இதேபோல் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளித்தால், கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்துள்ளது.