மும்பையில் நடைபெற்ற கணபதி  ஊர்வலத்தின் போது ஒரு தம்பதியினர் சத்தம் அதிகம் எனக் குற்றம்சாட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பண்டிகை காலங்களில் ஒலி மாசுபாடு குறித்த விவாதங்களை தூண்டியுள்ளது.

வீடியோவில், ஒரு பெண் தனது வீட்டுக்கு அருகில் நிகழ்ந்த ஊர்வலத்தில் தொல்-தாஷா இசை வாத்தியக் குழுவின் வாத்திய சத்தம் தன் 4 மாதக் குழந்தைக்கு தொந்தரவு ஏற்படுத்துவதாக கூறி, நேரில் சென்று இசையை நிறுத்துமாறு கேட்டுக்கொள்வது காணப்படுகிறது. அந்தப் பெண்ணை, அவரது கணவர் தொடர்ந்து வீடியோ பதிவு செய்வது போன்ற தோற்றம் காணப்படுகிறது.

 

“இது மிக அதிகமான சத்தம். நான் நான்கு மாத குழந்தையின் தாய். ஒரு மணி நேரமாக சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்” என பெண் பக்தர்களிடம் கோபத்துடன் தெரிவிக்கிறார். அவரது கணவரும், “ஒவ்வொரு வருடமும் இதைப் பற்றி சொல்ல வேண்டிய நிலை இருக்கக்கூடாது” என வலியுறுத்துகிறார்.

அந்த சமயத்தில், அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த முயலும் ஒரு பக்தர் மற்றும் பின்னர் ஒரு பெண் பக்தருடன் சூடான வாக்குவாதம் நிகழும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. தம்பதியர், ஊர்வலத்தினரிடம் உடனடியாக நிகழ்வை முடித்து விலகும்படி வற்புறுத்தும் காட்சிகளும் காணப்படுகிறது.