முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.பி. உதயகுமாரின் தாயார் மீனாள் அம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலைத் தொடர்ந்து, அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

“அதிமுகவின் புரட்சித் தலைவி பேரவைச் செயலாளராகவும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும், முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றி வரும் எம்.எல்.ஏ. ஆர்.பி. உதயகுமாரின் தாயாரும், அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளருமான மீனாள் அம்மாள், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.

பாசமிகு தாயாரை இழந்த வேதனையில் வாடும் உதயகுமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மீனாள் அம்மாளின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.