வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றிருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று காலை தாயகம் திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில், அவரை அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், திரளான தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
“ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் முதலீடுகளை ஈர்த்து, மன நிறைவுடன் திரும்பி இருக்கிறேன். இது, இதுவரை மேற்கொண்ட பயணங்களிலேயே முத்தாய்ப்பான பயணம்.
தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. மேலும், பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளன.
தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார்.
முதலீடுகளை ஈர்க்கும் எனது வெற்றிப்பயணத்தை பொறுக்க முடியாமல் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.” இந்த வெற்றிப் பயணத்தை பொறுக்க முடியாமல் புலம்பி தள்ளுகிறார்கள் என்றார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுகவின் நிலவும் சலசலப்புகள் மற்றும் செங்கோட்டையன் பதவி பறிப்பு குறித்த கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமாக பேசும்போது இப்படி அக்கப்போரான கேள்விகளை கேட்கிறீர்களே என்று கூறினார்.
