அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஏற்கனவே ஓபிஎஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய நிலையில் டிடிவி தினகரனும் விலகுவதாக கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அவரது விலகலுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்ற ஒரு செய்தி பரவி வந்த நிலையில் தற்போது இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து வருகிறார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளர் என அமித்ஷா எந்த ஒரு இடத்திலும் கூறவில்லை. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய ஜனநாயக கூட்டணியை சரியான முறையில் கையாளவில்லை. தமிழ்நாட்டின் மனநிலை அவருக்கு புரியவில்லை. நான் பிரதமர் மோடிக்காக தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தேன். எடப்பாடி பழனிச்சாமி அகங்காரத்தில் பேயோட்டம் ஆடுகிறார்.

பழனிச்சாமியை நயினார் நாகேந்திரன் தூக்கிப்பிடித்தது தான் அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம். முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவை ஒன்று சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறார். அவரது முயற்சிக்கு எப்போதுமே அமமுகவின் ஆதரவு இருக்கும். நிச்சயம் நான் செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன் என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நயினார் நாகேந்திரன் அதிக முக்கியத்துவம் கொடுத்தது தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் விலக காரணம் என அதிரடியாக அறிவித்துள்ளார் டிடிவி தினகரன்.