அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர்கள் மீண்டும் ஒன்றிணையும் வாய்ப்பு உருவாகி வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்), முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர். அவர் கூறிய கருத்துகளை வரவேற்கிறேன். அவரது முயற்சிக்கு வாழ்த்துகள்” என தொடக்கமாகக் கூறினார். “முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நிச்சயமாக சந்திப்பேன். ஒருங்கிணைப்புக் குறித்த 10 நாட்களுக்கான (கெடு) முடிந்த பிறகு, அவர் என்னைத் தொடர்புகொள்வார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.”
“அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பது என் நிலைப்பாடு. இதற்காக செங்கோட்டையன் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என் முழுமையான ஆதரவு உண்டு என்றார்.
அ.தி.மு.க.வில் நடைபெற்ற உள்கட்சிப் பிரச்சினைகளால் ஒதுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் மீண்டும் ஒரே அணியில் வரக்கூடிய வாய்ப்பு குறித்து சமீபத்தில் பல்வேறு அரசியல் தரப்புகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அம்மா ஆதரவு பெற்ற முன்னாள் தலைவர்கள் ஒன்றிணைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என செங்கோட்டையன் கூறிய நிலையில் அவரை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
