மணல் கடத்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியை மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் மிரட்டியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரிய அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் சோலாப்பூர் மாவட்டம், மாதா தாலுகா, குர்து கிராமத்தில், சாலை கட்டுமானத்துக்காக சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, கர்மலா டிஎஸ்பியான ஐபிஎஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா நேரில் சென்றார்.
அங்கு அஜித் பவார் அணியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரசு உறுப்பினர் ஒருவர், தொலைபேசியில் அஜித் பவாரை அழைத்து, அந்த அழைப்பை அஞ்சனாவிடம் கொடுத்தார். அதற்குப் பதிலளித்த அஞ்சனா, “நீங்கள் துணை முதல்வர் என்பதனை நான் எப்படித் தெரிந்துகொள்வது? தயவுசெய்து நேரடியாக எனது தொலைபேசியில் அழைக்கவும்”
என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் அஜித் பவார் கடும் கோபமடைந்து, “உனக்கு என்ன தைரியம்? உனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். என் முகத்தை பார்த்தாலே யார் என்பதை உணர்வாய். என் எண்ணை வாட்ஸ்அப்பில் சேமித்து, வீடியோ காலில் பார்த்துப் பேசு,” என்று விமர்சித்ததாக வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
மேலும், வீடியோ கால் மூலமாக பேசிய பின், சம்பவ இடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அஜித் பவார், ஐபிஎஸ் அதிகாரிக்கு கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, சிவசேனாவும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால் தற்போது அஜித் பவார் விளக்கம் கொடுத்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்த அஜித் பவார், “சோலாப்பூரில் நடந்த உரையாடல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நான் சட்ட அமலாக்கத்தில் தலையிட விரும்பவில்லை. நிலைமை சிக்கலாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் நடவடிக்கை எடுத்தேன். பெண் அதிகாரிகள் மற்றும் காவல் துறை மீதான மரியாதை என்னிடமுள்ளது. அனைத்து சட்டவிரோத செயல்களுக்கும் எதிராக, குறிப்பாக மணல் கடத்தலுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுப்பதில் உறுதிபூண்டுள்ளேன்”
என்று தெரிவித்துள்ளார்.
IPS officer Anjana Krishna from Solapur Rural Police went to take action against illegal sand mining after villagers complained about illegal sand mining.
A local NCP member at the spot called up Ajit Pawar and made the officer to speak to him. Another villager recorded the call… pic.twitter.com/A9On8JZ30J
— Congress Kerala (@INCKerala) September 5, 2025
