அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் அவகாசம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதேநேரத்தில், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் செய்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தேனியில் இருந்து கம்பத்திற்கு சென்றபோது, உத்தமபாளையம் அருகே மக்கள் சிலர் ஒன்றிணைப்பு கோரிக்கை எழுப்பியதால் பதற்றம் நிலவியது. அப்போது, பேருந்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். அதேபோன்று, போடி அருகே சங்கராபுரத்திலும் மக்கள் “அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என கோஷமிட்டனர்.
இந்த சம்பவங்கள் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, தேவர் பேரவை என்ற பெயரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், கம்பத்தில் தொண்டர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
“அதிமுக ஜனநாயக கட்சி. இங்கே யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். தொண்டன் கூட எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், முதல்-அமைச்சர் ஆக முடியும். இதுதான் அதிமுகவின் வலிமை. ஆனால் திமுகவில் இப்படி சொல்ல முடியாது” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், “அதிமுக சுதந்திரமாக செயல்படும் கட்சி. இதை யாராலும் அசைக்க முடியாது. எவ்வளவோ அவதாரம் எடுத்து பார்த்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆனால் எதுவும் முடியவில்லை. எவ்வளவோ வழக்குகள் வந்தாலும், உங்களின் ஒத்துழைப்புடன் எல்லாம் தவிடு பொடியாக்கி விட்டோம்” என்றும் EPS உறுதியாக கூறினார். இந்த நிகழ்வுகள், அதிமுகவில் ஒன்றிணைப்பு விவகாரம் எவ்வாறு நகரும் என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.
