ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், நாட்டையே உலுக்கியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகாக பதிவு செய்யப்பட்ட இந்த நிலநடுக்கம், கடந்த மாதம் 31ம் தேதி ஜலாலாபாத் அருகே பூமிக்கடியில் 8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இதில் குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல கட்டிடங்கள் தரைமட்டமாக விழுந்துள்ள நிலையில், இதுவரை 2,200க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் 3,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், சில முக்கிய காரணங்களால் இந்த மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களை மீட்பதில் அதிக சிக்கல்கள் உருவாகி உள்ளன. இதற்கு காரணமாக, தாலிபான்கள் விதித்துள்ள “ஆண்கள் பெண்களை தொடக்கூடாது” என்ற கட்டுப்பாடே குறிப்பிடப்படுகிறது.

தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில், பெண்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்ற ஆண்கள் தொட அனுமதிக்கப்படவில்லை. இந்த விதி, சாதாரண நாட்களில் கடைப்பிடிக்கப்படுவது போதுமானது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் சூழ்நிலையில் கூட இந்த விதியை கடுமையாக பின்பற்றப்படுவதால், இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண்களை மீட்பதில் தாமதம் ஏற்படுகிறது.

பல மீட்புப் பணியாளர்கள், பெண்களை மீட்பதற்கு தயங்குவதால், அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. பெண் மீட்பு பணியாளர்கள் இல்லாததால், ஆண்கள் இந்த விஷயத்தில் கையெழுத்துப்போட மறுக்கிறார்கள். “நாங்கள் பெண்களை தொட முடியாது” என கூறி, அவர்கள் உயிர் ஆபத்தில் இருந்தாலும் உதவ மறுக்கின்றனர் என்பதுதான் தற்போதைய மிகுந்த வேதனைக்குரிய நிலை.

இது குறித்து குனார் பகுதியை சேர்ந்த பீபீ ஆயிஷா கூறுகையில், “நாங்கள் உதவிக்காக கத்தினோம், ஆனால் யாரும் வரவில்லை. காயமடைந்த பெண்கள் ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் எங்களை புறக்கணித்துவிட்டார்கள்” என்றார். இதேபோல் மீட்பு பணியில் ஈடுபட்ட தஹ்ஸீபுல்லா முஹாசிப் என்பவர், “பெண்கள் சிக்கியிருந்தாலும், யாரும் அவர்களை மீட்பதில்லை. கலாசார ரீதியான விதிமுறைகள் காரணமாக அனைவரும் பயப்படுகின்றனர்” என கூறினார்.

தாலிபான்கள் ஆட்சி வரும் பிறகு, பெண்களுக்கு டிரைவிங், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரிலும் பெண்கள் மீட்கப்படாமல் தவிக்கும் நிலை, அந்த நாட்டில் பெண்கள் எந்தவகையில் இரண்டாம் நிலை குடிமக்களாக மாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்நிலையில், மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சர்வதேச சமுதாயம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது.