மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மகாநந்த நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கியில் கடனுக்கு அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் சுமார் ரூ.5 கோடியும், பணம் ரூ.8 லட்சமும் காணாமல் போனதாக புகார் பெறப்பட்டது. தகவலின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வங்கியின் சி.சி.டி.வி. பதிவுகளை கவனித்தனர்.

அதில், 2 பேர் சுவர் ஏறி மேல்தளத்திற்குள் புகுந்து, பூட்டுகளை திறந்து, வங்கிக்குள் நுழைந்துள்ளதையும், லாக்கர்களை உடைக்காமல் திறந்து உள்ளே இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதையும் கண்டறிந்தனர். இது முன்னிட்டு, வங்கி ஊழியர்களுக்கும்  தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். தொடர்ந்து விசாரணை செய்ததில், வங்கியின் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய ஜெய் பவ்சார் என்பவர், தனது நான்கு நண்பர்களுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஜெய் பவ்சார் உட்பட 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறப்படும் வங்கியின் மேலாளர் மற்றும் இரண்டு அதிகாரிகள் நிலைத்தடையை சந்தித்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என உஜ்ஜைன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தெரிவித்துள்ளார்.