கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மொடக்கல்லூர் அத்தோலி பகுதியைச் சேர்ந்த ஆயிஷா ரஷா (21) என்பவர், மங்களூரில் உள்ள ஒரு தனியார் பிசியோதெரபி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், வெங்கேரி பன்னடிகல் பகுதியைச் சேர்ந்த உடற்பயிற்சி மாஸ்டராக பணியாற்றும் பஷீர்தீன் முகம்மது என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளாக காதல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. பஷீர்தீன், கோழிக்கோட்டின் எரஞ்சிபாலத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி வந்தார். அந்த வீட்டிற்கு ஆயிஷா ரஷா அடிக்கடி சென்று தங்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

சமீபத்தில், பஷீர்தீன் வேலை பார்த்து வரும் உடற்பயிற்சி கூடத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என ஆயிஷா ரஷா கூறியபோதும், பஷீர்தீன் அதனை தவிர்த்து கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறுக்குப் பின்னர், பஷீர்தீனின் வீட்டில் ஆயிஷா ரஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், உயிரிழந்தார்.

தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்திய போலீசார், மாணவியின் செல்போனை கைப்பற்றி சோதனையிட்டனர். அதில், தற்கொலை செய்யும் முன் பஷீர்தீனுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில், “எனது மரணத்துக்கு நீயே பொறுப்பு” என எழுதியிருந்ததை கண்டறிந்தனர்.

இதனடிப்படையில், மாணவியின் காதலன் பஷீர்தீனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மாணவியின் உறவினர்களும், பஷீர்தீன் அவரை மிரட்டி அடித்ததாக குற்றம்சாட்டியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.