உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராம் பதிவைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனத்தின் அலர்ட் மூலம் போலீசாரால் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட மாணவி, இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தின் மூலமாக ஒரு இளைஞரை காதலித்து வந்ததாக தெரியவந்தது. ஆனால், அந்த இளைஞர் சமீபத்தில் தொடர்பைத் துண்டித்ததால் மனமுடைந்த மாணவி, பூச்சிக் கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
தற்கொலை முயற்சிக்கு முன், மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்கொலை குறிப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதனை மெட்டா நிறுவனம் கவனித்து, உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்திற்கு அலர்ட் செய்தது.
இந்த தகவலை பெற்ற போலீசார், 16 நிமிடங்களில் மாணவியின் வீடு வரை விரைந்து சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டுள்ளனர். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மாணவியின் உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழ்நிலையில், உத்தரப் பிரதேச மாநில போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், 2022ம் ஆண்டு முதல், தற்கொலை தொடர்பான தகவல்களை உடனடியாகப் பெறும் வகையில், மெட்டா நிறுவனத்துடன் போலீசார் ஒப்பந்தம் ஒன்றை கொண்டுள்ளதாகவும், அதன் மூலம் ஜனவரி 2023 முதல் இதுவரை 1,315 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
