கர்நாடக மாநிலம் ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி ஒருவர், கடந்த 27ஆம் தேதி மதியம் பள்ளி கழிவறைக்குச் சென்ற போது திடீரென பிரசவ வலியில் தவித்து, கழிவறையிலேயே ஆண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் கர்ப்பம் குறித்து பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், குடும்பத்தினர் யாரும் சிந்திக்காமல் இருந்தது, இந்த சம்பவத்தால் தெரியவந்தது.
விசாரணையில், சுமார் 9 மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒரு 28 வயது இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி இந்த விஷயங்களைப் பற்றி எதுவும் தெரிவிக்காமல் இருந்ததாலும், தற்போது திடீரென நடந்த பிரசவத்தால், இந்த விஷயம் முழுமையாக வெளிச்சத்துக்கு வந்தது. மாணவியும், குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில், 28 வயது அந்த மர்மநபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மாணவியின் கர்ப்பம் மற்றும் மனநிலை குறித்து சரியான கவனிப்பு எடுக்காததற்காக, பள்ளி முதல்வர், செவிலியர், விடுதி வார்டன் மற்றும் மாணவியின் சகோதரர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
