தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், நடிகர் சங்க பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார். “நடிகர் சங்க கட்டிடம் கட்டினால் தான் தனது கல்யாணம் நடைபெறும்” என்று கடந்த சில ஆண்டுகளாக கூறி வந்த விஷால், இதை ஒரு வரம் போல வைத்துக்கொண்டு இருந்தார். ஆனால் தற்போது அந்த கட்டிடம் முடிக்கப்படும் தருவாயில் இருக்க, தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 29 அன்று திருமணம் நடக்கும் என்று அறிவித்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்.
விஷால் காதல் விவகாரம் பற்றி கடந்த காலங்களில் பல கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன. ஒரு காலத்தில் வரலட்சுமி, பிறகு அனிஷா அலி ரெட்டி என பலருடன் விஷால் காதலில் இருந்ததாக செய்திகள் வந்தன. இந்நிலையில் சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகாவுடன் காதல் புரிந்து வருவதாகவும், “விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்” எனவும், “என் பிறந்தநாளன்று திருமணம் நடைபெறும்” என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று விஷாலின் 48-வது பிறந்தநாளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களோடு கொண்டாடி வருகின்றனர். “திருமணம் நடக்கப்போகிறது” என்று அறிவித்த விஷால், இன்று எந்த ஒரு திருமண நிகழ்வும் நடக்கவில்லை என்பதாலேயே ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருக்கின்றனர். “விஷால் வழக்கம் போல இந்த முறையும் நம்மை ஏமாற்றிட்டாரு” என சமூக வலைதளங்களில் மீம்ஸ், கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
அதேவேளை, நடிகர் சங்க கட்டிட பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், செப்டம்பரில் திறப்பு விழா நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கட்டிட திறப்புக்குப் பிறகு, விஷால் தனது திருமணத்தை பற்றிய தகவல்களை வெளியிடுவாரா என்பது ரசிகர்களிடையே ஆர்வத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஷால், சாய் தன்ஷிகாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஷால் மிக முக்கிய அறிவிப்பை இன்று மதியம் 12.30 மணி அளவில் வெளியிடப் போவதாக பயங்கர சஸ்பென்ஸ் கொடுத்துள்ளார். இதனால் என்ன அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஆனால் நடிகர் சங்க கட்டட திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
