மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பிரமாண்ட அளவில் நடைபெற்றது. இதில் தலைவராக விஜய் கலந்து கொண்டு, “நான் வரேன்…” என்ற பாடலுடன் ரேம்ப் வாக் செய்து வருகிறார். இதைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்த நிலையில், மேடையை நோக்கி சில ரசிகர்கள் செல்ல முயன்றனர். அவர்களை தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3,000-க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொண்டனர். பலர் மேடையில் ஏற முயன்ற வேளையில் தூக்கி தரையில் வீசப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதில் ஒருவர் படுகாயமடைந்து தரையில் வலியில் புரண்டபடியே கதறியபோதும், யாரும் உதவ முன்வரவில்லை. மேலும், மற்றொரு இளைஞர் கம்பியிலேயே தொற்றிக்கொண்டு உயிரைக் காக்க முயன்றதைப் போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. சம்பவத்தைக் கண்டவர்கள் பவுன்சர்களின் செயல்பாட்டில் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவர், ரேம்ப் மேடையில் ஏற முயன்றதற்காக தன்னை பவுன்சர்கள் தூக்கி வீசியதாகக் குற்றச்சாட்டு எழுப்பி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அவரது தாயாரும் அவரது உடனிருந்தார். இந்நிலையில் தொண்டரை பவுன்சர் தூக்கி வீசிய சம்பவத்தில் விஜய் மீது முதல் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக – வின் சரத்குமார் பெரம்பலூர் எஸ்பி ஆபிஸில் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். FIR 346/2025- ல் கொலை மிரட்டல், சுட்டுத் தாக்குதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக விஜய், மேலும் பவுன்சர்கள் 10 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
