கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி, டெல்லி முதல்வர் ரேகா குப்தா பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று மக்களது புகார்களை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென மேடையில் ஏறி, அவரை தாக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தாக்குதல் நடத்திய நபர் குஜராத்தின் ராஜ்கோட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்பாய் சகாரியா என போலீசார் அடையாளம் கண்டனர். விசாரணையில், தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வந்த ராஜேஷ், அரசின் நடவடிக்கைகள் மீது கடும் கோபத்தில் இருந்ததால் இந்தத் தாக்குதலுக்கு உட்பட்டதாக கூறப்படுகிறது. ராஜேஷ், டெல்லி வந்ததற்கு பின்பு, தனது நகரத்தைச் சேர்ந்த ஐந்து பேருடன் தொடர்பில் இருந்ததையும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்த விசாரணையில், ராஜேஷ் இந்த தாக்குதலை சாதாரணமாக செய்யவில்லை, முதல்வரை கொலை செய்யும் திட்டத்துடன் வந்திருந்ததும் தெரியவந்துள்ளது. அவர் கூட்டத்திற்கு கத்தியை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். ஆனால், போலீஸ் பாதுகாப்பை பார்த்தவுடன், அவர் தனது கத்தியை சிவில் லைன்ஸ் பகுதியில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. தற்போது அந்த கத்தியும் போலீசாரால் மீட்கப்பட்டு, மேலதிக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.