மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) 2-வது மாநில மாநாடு, அதில் தலைவர் விஜய் நிகழ்த்திய பேச்சு பெரும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசை கடுமையாக விமர்சித்ததோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை “அங்கிள்” என அழைத்தது அரசியல் பரபரப்பை  ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்றும், சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் “சரிதானே?” என கூட்டத்தில் பேசிய விஜயின் பேச்சு, நிகழ்விடம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது.

இதனைக் கடும் விமர்சனத்துடன் திமுகவினர் எதிர்த்து வருகின்றனர். திமுகவின் முக்கிய அமைச்சர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் விஜயின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மதுரை முழுவதும் விஜய்க்கு எதிராக திமுகவினர் “வாட் புரோ… ஓவர் புரோ… அடக்கி வாசிங்க புரோ…” என ஆங்கில வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டி களமிறங்கினர். தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவை சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தின.

திமுகவினரின் போஸ்டர்களுக்கு பதிலடி கொடுக்க, இன்று த.வெ.க.வினர் மீண்டும் போராட்ட போஸ்டர்களுடன் களத்தில் இறங்கினர். “கதறல் சத்தம் கேக்குதா அங்கிள்?”, “சிங்கத்தின் கர்ஜனை தொடரும்… அது உங்கள் உடன்பிறப்புகளை தூங்க விடாது” என துள்ளல் வாசகங்களுடன் பொலிந்த அந்த போஸ்டர்கள், பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மதுரையில், முக்கிய இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவ்வாறு திமுக – தவெகா இடையே போஸ்டர் போருக்கு வடிவமைந்துள்ளது, மதுரை அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.