தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது. இதில் உரையாற்றிய கட்சித் தலைவர் விஜய், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி அவர்களே, தமிழக மக்களிடம் உங்களிடம் கேட்க ஏராளமான கேள்விகள் இருக்கின்றன.
மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீட்டுத்தருங்கள். மொரட்டு பிடிவாதம் போன்று நீட் தேர்வை திணிக்க வேண்டாம். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வே தேவையில்லை என அறிவியுங்கள். தமிழக மக்கள் தாமரை இலையிலே தண்ணீரை போல ஒட்ட மாட்டார்கள்” எனக் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், விஜயின் பேச்சுக்கு எதிர்வினையாக சரத்குமார் பதிலளித்தார். தனது பிறந்தநாளையொட்டி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நலத்திட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழை வளர்த்தவர் மோடி; உலகின் சிறந்த தலைவர் அவர்தான். 12 ஆண்டுகளில் ஒரு மீனவரும் இறக்கவில்லை.
கச்சத்தீவை தாரை வார்த்தது திமுகதான். மோடியை ‘Mr’ என்றும், முதல்வரை ‘அங்கிள்’ என்றும் விஜய் கூறுவது மரியாதைக் குறைவு. கோடநாட்டில் தெருவில் நின்றிருந்தால் ஜெயலலிதாவுக்கு Miss. ஜெயலலிதா என்று கூறியிருப்பாரா? NEET தேர்வை எதிர்த்தாலும், அதை கொண்டுவந்தது யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். தகுதியானவர்கள் பதவிக்கு வர வேண்டும். இது போன்ற கூட்டம், விளம்பரக் கூட்டமல்ல” என்று கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
