ஆசிய கோப்பையின் ஒரு பகுதியாக துபாயில் வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் ரத்தம் இன்னும் வறண்டு போகவில்லை. அவர்களது குடும்பங்களின் கண்ணீரும் வறண்டு போகவில்லை. அப்படி இருக்கும் போது பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது மனிதாபிமானமற்ற செயல்.
பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவது நமது வீரர்களின் வீரத்தை அவமதிப்பது போன்றது. அது மட்டுமில்லாமல் காஷ்மீருக்காக தனது உயிரை தியாகம் செய்த ஷியாம் பிரசாத் முகர்ஜி உள்பட ஒவ்வொரு தியாகியையும் அவமதிக்கும் செயல். இந்து மதம் மற்றும் தேசபக்தியை விட பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நீங்கள் நாட்டின் உணர்வுகளை புண்படுத்துகிறீர்கள்.
உங்களது உங்களது முடிவை சிவசேனா வன்மையாக கண்டிக்கிறது. ஒரு காலத்தில் நீங்கள் தான் ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாயவில்லை எனக் கூறினீர்கள். இப்போது ரத்தமும், கிரிக்கெட்டும் ஒன்றாக பாயுமா? பஹல்காம் தாக்குதல் மூலம் பயங்கரவாத அமைப்பு 26 பெண்களின் நெற்றியில் இருந்து குங்குமத்தை அழித்தது. அந்த தாய்மார்கள், சகோதரிகளின் நிலையை நீங்கள் நினைத்து பார்த்தீர்களா?
பாகிஸ்தான் உடனான போட்டிக்கு பின்னால் மிகப்பெரிய பந்தயம் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் இருப்பதாகவும் அதில் பல பாஜக உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார் மேலும் அமித்ஷாவின் மகனான குஜராத்தை சேர்ந்த ஜெய் ஷா கிரிக்கெட் விவகாரங்களை கவனித்து வருவதால் பாஜகவிற்கு இதற்கு பின்னால் ஏதாவது பணபலன்கள் உள்ளதா எனவும் சஞ்சய் கேள்வி எழுப்பியுள்ளார்.
