தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்ததன் அடிப்படையில், “கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான தமிழ்நாடு அரசு பணியாளர்கள் விதிகள் 2023-ல் உருவாக்கப்பட்டது”. இந்த விதிகளை திருத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. தற்போது நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி அந்த விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் இனி ஒற்றை முன்னுரிமை பட்டியலாக பராமரிக்கப்படும். ஆன்லைன் போர்டல் வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். துறையின் இணையதளம், நேரடி அலுவலகங்களில் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் நீக்கப்படும்.
அரசு பணியில் இருந்த ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால் அவரது குடும்பத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதன் கீழ் சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.
இறந்த அரசு ஊழியரின் மனைவி அல்லது கணவர், மகன், மகள், தத்துமகன், தத்து மகள், திருமணம் ஆகாத அரசு ஊழியராக இருந்தால் அவரது குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி ஆகியோருக்கு பணி வழங்கப்படும். விண்ணப்பதாரரின் கல்வி தகுதி அடிப்படையில் பெரும்பாலும் குரூப் சி குரூப் டி பிரிவுகளில் பணியிடங்கள் வழங்கப்படுமே தவிர இறந்த ஊழியர் வைத்து அதே பதவியைப் பெற வாய்ப்பு கிடையாது.
காலி பணியிடங்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் பணி நியமனம் வழங்கப்படும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த விண்ணப்பதாரர்களுக்கு தீர்வு கிடைக்கும். விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். கணவன், மனைவிக்கு 50 வயது வரையிலும், மகன் மகள் சகோதரிக்கு 40 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
