மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 22, 2025) பிரமாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், “சிங்கம் ஒருமுறை கர்ஜித்தால் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு சத்தம் கேட்கும்.

பசியிலிருந்தாலும், இறந்த, கெட்டுப்போன உணவைத் தொடாது. காட்டில் எல்லை வகுத்து, கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். சிங்கம் அவ்வளவு சீக்கிரம் யாரையும் தொடாது, தொட்டால் விடாது. தனியாகவும், கூட்டமாகவும் வரத் தெரியும்,” என்று உரையாற்றினார். இந்தப் பேச்சு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

முன்பு விஜய்யை புகழ்ந்து பேசிய சீமான், தற்போது தவெக கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில், “நாங்கள் புலிகள், அணில்கள் குறுக்கே ஓட வேண்டாம்,” என்று தவெக தொண்டர்களை குறிப்பிட்டு சீமான் பேசியது, தவெக ஆதரவாளர்களை கோபப்படுத்தியது.

இந்நிலையில், விஜய்யின் ‘சிங்கம்’ உரையை, சீமானின் ‘புலி’ கதைக்கு பதிலடியாகவும், அவரது விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை மறைமுகமாக உணர்த்துவதாகவும் நெட்டிசன்கள் விவாதிக்கின்றனர்.

“சிங்கம் இறந்த உணவைத் தொடாது,” என்ற விஜய்யின் கருத்து, சீமானை மறைமுகமாக குறிப்பிடுவதாகவே உள்ளது என்று கிண்டல் செய்யும் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த மாநாடு, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் அரசியல் உத்தியை வெளிப்படுத்துவதாக அமைந்தது.