கர்நாடகா மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோவர்ஹட்டி கிராமத்தைச் சேர்ந்த வர்ஷிதா (19), சித்ரதுர்கா சமூக நலத்துறை விடுதியில் தங்கி, அங்குள்ள ஒரு கல்லூரியில் B.A. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 14ம் தேதி ஊருக்குப் புறப்படுவதாக விடுதி வார்டனிடம் கடிதம் எழுதி கொடுத்திருந்தார். ஆனால் அதன்ப் பிறகு, சித்ரதுர்கா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பாதி எரிந்த நிலையில் ஒரு பெண் உடல் மீட்கப்பட்டது. இது வர்ஷிதா என்பதனை போலீசார் உறுதி செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் மொபைல் பதிவுகளின் உதவியுடன் விசாரணை நடத்திய போலீசார், வர்ஷிதாவை அவரது காதலன் சேத்தன் திட்டமிட்டு அழைத்து சென்றதாகவும், பின்னர் இருவருக்குள் ஏற்பட்ட தகராறில் அவர் தாக்கி கொலை செய்த பிறகு, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததும் தெரியவந்தது. சித்துர் பகுதியைச் சேர்ந்த சேத்தன், புற்றுநோய் மூன்றாம் கட்டத்தில் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. வர்ஷிதா வேறொருவருடன் பழகுவதை அறிந்த சேத்தன் கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் வர்ஷிதாவை வரவைத்து கொலை செய்தது விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர சம்பவம் சித்ரதுர்கா நகரில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள், பெண்ணுரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றாகக் கூடிவந்து, வர்ஷிதாவுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் தாயார் ஜோதி, “அவரை ஒரு ஆண் போல் வளர்த்தேன்… அவருக்கு உயர்ந்த கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தேன்… இந்த அவலத்தை என் கூட கனவில் நினைத்ததில்லை,” எனக் கூறி கலங்கினார்.