காஞ்சிபுரம் மாவட்டம் மேவலூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(47). இவரது மனைவி பவானி(38). இந்த தம்பதியினர் பேரம்பாக்கம் தண்டலம் சாலையில் பிரியாணி கடை நடத்தி வந்தனர். இவர்களது கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்த மதன்ராஜ்(36) என்பவருக்கும் பவானிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இதனை அறிந்த ஹரிகிருஷ்ணன் மதன் ராஜை வேலையில் இருந்து நீக்கி தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த பவானி தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரை காரை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஹரிகிருஷ்ணன் உயிர் தப்பினார்.

பின்னர் மனைவி தன்னை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்றதை அறிந்த ஹரிகிருஷ்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பவானியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மதன் ராஜ் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.