இப்போது பலரும் AI-ஐ நம்பி தகவல்களைத் தேடுகிறார்கள். ஆனால் அதையே முழுமையாக நம்புவதால் சில நேரங்களில் பெரிய சிக்கல்கள் ஏற்படலாம் என்பதைச் சொல்லும் சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஸ்பெயினைச் சேர்ந்த மேரி கால்டாஸ் என்ற பெண் தனது காதலருடன் பியூர்டோ ரிகோவுக்கு விடுமுறை பயணம் செல்ல திட்டமிட்டார். பயணத்திற்கு விசா தேவைப்படுமா என அவர் ChatGPT-யிடம் கேட்டார். அப்போது “விசா தேவையில்லை” என கிடைத்த தவறான தகவலை நம்பி சென்றதால், அவர்கள் விமானத்தை தவறவிட்டனர். இதனால் மன உளைச்சலில் விமான நிலையத்தில் கண்ணீர் மல்கிய மேரியின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, பியூர்டோ ரிகோ செல்ல விசா தேவையில்லை என்பது உண்மை தான். ஆனால் கட்டாயமாக ESTA (Electronic System of Travel Authorization) ஆவணம் இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாமல் போனது. இதனால் அவர்கள் பயணமே சீர்குலைந்தது. வீடியோவில் மேரி அழுதபடி பேச, அருகில் இருந்த அவரது காதலர் அலெஜான்ட்ரோ சிட் ஆறுதல் கூறும் காட்சி பதிவாகியுள்ளது.

“>

 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “அதிகாரப்பூர்வ தளங்களில் சரிபார்த்திருக்கலாம், AI மட்டும் நம்பியதால் தான் பிரச்சனை” என்று சிலர் கூற, “இது ஜிபிடியின் தவறு இல்லை, கேள்வி கேட்கும் முறையிலேயே பிழை இருக்கலாம்” என்று மற்றவர்கள் விமர்சித்துள்ளனர்.

இறுதியில் அந்த ஜோடி பியூர்டோ ரிகோ சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளாலும், இந்த சம்பவம் AI தகவல்களை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்ற எச்சரிக்கையாக மாறியுள்ளது.