சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூர், ஞானமணிநகர் 3–வது தெருவைச் சேர்ந்த அருண் (44), பெயிண்டிங் டிசைனர் வேலை செய்து வரும் மாற்றுத் திறனாளி. அவர் தனது மனைவி வனஜா (38) மற்றும் இரு மகன்களுடன் வாழ்ந்து வந்தார்.

குடும்பச் செலவுகளுடன், வனஜா சமீபத்தில் யூடியூப் மூலம் பங்கு சந்தை தொடர்பான வீடியோக்களைப் பார்த்து அதில் ஆர்வம் கொண்டு சிறிய அளவில் முதலீடு செய்தார். தொடக்கத்தில் கிடைத்த வருமானம் அவருக்கு நம்பிக்கையை அளித்ததால், “அதிக பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்” என எண்ணிய அவர், கணவருக்குத் தெரியாமல் தனியார் கடன் செயலி மூலம் ரூ.2.5 லட்சம் கடன் எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்.

ஆனால் அதிர்ஷ்டம் அமையாமல், அவர் முதலீடு செய்த தொகை முழுமையாக இழந்துவிட்டார். இதனால் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்த வனஜாவுக்கு, தனியார் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்த வனஜா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தை அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையின் போது, வனஜாவின் செல்போனில் தற்கொலைக்கு முன்னர் பதிவு செய்த மூன்று ஆடியோ கோப்புகள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒரு ஆடியோவில், “நான் தனியார் வங்கியில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கியதால் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறியிருப்பது தெரியவந்தது.

அந்த ஆடியோவை அவர் தனது கணவர் அருணுக்கு ‘வாட்ஸ்அப்’ மூலம் அனுப்பிய பின்னரே தற்கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.