வேலூர் விநாயகாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (69) மற்றும் அவரது மனைவி கோட்டீஸ்வரி, ஆம்பூர் அருகே வேப்பங்குப்பத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதியில் வசித்து வந்தனர். கோட்டீஸ்வரி அங்கு சமையலராக பணிபுரிந்தார்.
கடந்த 2018 செப்டம்பர் 13 அன்று, கோட்டீஸ்வரி 11 வயது மாணவியை தனது கணவர் வெங்கடேசனுடன் அனுப்பி வைத்தார். வெங்கடேசன் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், இதேபோல் விடுதியில் உள்ள மற்ற மாணவிகளுக்கும் தொல்லை கொடுத்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் விடுதி காப்பாளர் மாலதியிடம் புகார் அளித்தனர். வெங்கடேசன் 11 வயது மாணவி உட்பட 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததும், இதற்கு கோட்டீஸ்வரி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வெங்கடேசன் மற்றும் கோட்டீஸ்வரி கைது செய்யப்பட்டனர். வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது கோட்டீஸ்வரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறுதி விசாரணைக்குப் பின், வியாழக்கிழமை நீதிபதி எஸ். மீனாகுமாரி தீர்ப்பு வழங்கினார்.
11 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் வெங்கடேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ₹10,000 அபராதம், அதனை கட்டத் தவறினால் ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 5 மாணவிகளுக்கு தொல்லை அளித்த வழக்கில் தலா 3 ஆண்டுகள் என மொத்தம் 15 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ₹5,000 என ₹25,000 அபராதம், அதனை கட்டத் தவறினால் 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பி.டி. சரவணன் ஆஜரானார்.
