கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் ரோடு வருவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6, 8, 9 ஆம் வகுப்பு படித்து வந்த 6 மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அதில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதுகுறித்து அவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் ஜெயராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதன்படி ஜெயராச்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.