புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவிகள் சீருடையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்வித் துறை வெளியிட்ட உத்தரவு படி, இனி 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் சுடிதாருக்கு மேலாக ஓவர்கோட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான வடிவமைப்புக்கும் அனுமதி வழங்கப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்கு முன்பே, தமிழக அரசு பள்ளிகளில் மாணவிகள் ஓவர்கோட் அணியும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை பின்பற்றும் வகையில், புதுச்சேரியிலும் 2013ஆம் ஆண்டில் முயற்சி எடுக்கப்பட்டாலும், அப்போது அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், சீருடை மாற்றம் கைவிடப்பட்டது. ஆனால் தற்போது, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மீண்டும் கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி கல்வித் துறை துணை இயக்குனர் கவுரி வெளியிட்ட உத்தரவில், கண்காணிப்பு அதிகாரிகள் பள்ளி தோறும் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து வடிவமைப்பை காண்பித்து, மாணவிகளுக்கான ஓவர்கோட் தைக்க அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடையில், ஓவர்கோட்டிற்கான துணியும் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், புதுச்சேரி அரசு பள்ளி மாணவிகள் இனி சுடிதாருடன் ஓவர்கோட் அணிவது கட்டாயமாகிறது என்பதில் அதிகாரப்பூர்வ உத்தரவு வந்துள்ளது.
