ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்த சேலத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி, தனது சக மாணவருடன் மூன்று ஆண்டுகளாக காதலில் இருந்தார். அலைபாயுதே திரைப்பட பாணியில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டனர்.
பின்னர், அந்த உறவில் மாணவி கர்ப்பமானார். கர்ப்பத்துடன் அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படிக்கத் தொடங்க, காதல் கணவரும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தயாரிப்புக்காக சைதாப்பேட்டையில் குடியேறினார்.
விடுதியில் தங்கியிருந்த மாணவியின் வயிறு பெரிதாகத் தோன்றியதால், சக மாணவிகள் சந்தேகம் கொண்டனர். ஆனால், “வயிற்றில் கட்டி வளர்கிறது, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று மாணவி கூறினார். கர்ப்பம் ஏழு மாதத்தைத் தாண்டிய நிலையில், விடுதியில் தனியாக இருந்தபோது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அங்கேயே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். விஷயம் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில், காதலனுக்கு தகவல் தெரிவித்தார். காதலன் வந்து, குழந்தையுடன் மாணவியை திருவல்லிக்கேணி லாட்ஜில் தங்க வைத்தார்.
பிறந்த குழந்தையை எப்படிச் செய்ய வேண்டும் என ஆலோசித்த இருவரும், அதை ஒரு கட்டைப்பையில் வைத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பையோடு குழந்தையை விட்டு விட்டு தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், அங்கு இருந்த போலீஸ்காரர் இருவரையும் சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்தார். விசாரணையில், அவர்கள் “குழந்தையை குப்பைத் தொட்டியில் கண்டோம்” என்று முதலில் கூறினாலும், கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டனர்.
குழந்தை உடனடியாக திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மாணவி அவர் தங்கி இருந்த விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காதலன் கோர்ட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார், உயர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்ற பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, மாணவர் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
