தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபராக மூன்றாவது முறையாக நிக்கோலஸ் மதுரோ பதவி வகித்து வருகிறார். 2020 ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மதுரோ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மீது போதைப்பொருள் தீவிரவாதம் மற்றும் கொக்கைன் கடத்தல் சதித்திட்டம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

அப்போது, அவரை கைது செய்ய உதவுவோருக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. பின்னர், ஜோ பைடன் நிர்வாகம் அந்தத் தொகையை ரூ.219 கோடியாக உயர்த்தியது. இது சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லாடனை பிடிக்க அறிவித்த பரிசுத்தொகைக்கு நிகராகும். இவ்வளவு பெரிய பரிசுத்தொகையும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் கடும் எதிர்ப்புகளும் இருந்தபோதும், மதுரோ தனது பதவியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை இருமடங்காக உயர்த்தி, ரூ.450 கோடியாக நிர்ணயிக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். இந்த முடிவு, மதுரோவை சர்வதேச ரீதியில் கைது செய்யும் முயற்சியை மேலும் தீவிரப்படுத்தும் என கருதப்படுகிறது.