மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பையாவின் மகள் பாண்டிச்செல்வி (24), பட்டதாரி, தற்போது குடும்பத்துடன் திருமங்கலம் அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தார்.
நேற்று மதியம் விருதுநகர் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி வீட்டிற்கு வந்து சாப்பிட்டார். சாப்பிட்ட சில நேரத்திலேயே அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் விழுந்தார். இதைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவே பாண்டிச்செல்வி உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் குடும்பத்தினரையும், உறவினர்களையும் பேரதிர்ச்சியிலும் துயரிலும் ஆழ்த்தியது. உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
