தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டையில் உள்ள வாலாஜாவில் 13 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கலவை பகுதியில் 10 செ.மீ., திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலசப்பாக்கத்தில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதையடுத்து, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று (ஆக.8) மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், ஆகஸ்ட் 8-ஆம் தேதி வடதமிழகத்தின் பல இடங்களில் மற்றும் தென்தமிழகத்தின் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாகபட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆக.9 முதல் ஆக.13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 35 முதல் 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், கடலோர மக்களும், மீனவர்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.