செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வட தமிழகத்தில் பல இடங்களில், தென் தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், நாளைய தினம் கோவை, நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நகரின் வானிலை பற்றி கூறும்போது, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பொதுமக்கள், விவசாயிகள், மற்றும் பாதுகாப்பு துறையினர் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.