நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவன், தனது வகுப்பில் படிக்கும் மாணவியுடன் இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கமான நிலையில் இருந்துள்ளார். இந்த நட்பு குறித்து தகவல் தெரிந்ததும், மாணவியின் குடும்பத்தினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாணவனை பலமுறை எச்சரித்து வந்துள்ளனர். இருப்பினும், இந்த பழக்கம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து,  மாணவியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, மாணவனின் வீட்டில் புகுந்து, அரிவாலால்  வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். தாக்குதலின் போது வீட்டில் இருந்த பொருட்களையும் சிதைத்து சூரையாடியதுடன், சம்பவத்திற்கு பிறகு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது நிலை சற்று பரவாயில்லாத நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோர் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில், மாணவியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட ஆறுபேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.