2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மகாராஷ்டிராவின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீண்ட கால விசாரணைக்கு பின் தற்போது 17 ஆண்டுகள் கழித்து அவருக்கு குற்றச்சாட்டு ஏதுமில்லை என நீதிமன்றம் விடுதலை அளித்துள்ளது.

இந்த நிலையில், மும்பையில் ஊடகங்களிடம் பேசிய பிரக்யா தாக்கூர், தன்னை காவலில் எடுத்து விசாரித்த அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக தலைவர்கள் ராம் மாதவ் மற்றும் இந்திரேஷ் குமார் ஆகியோர்களின் பெயர்களை வெளியிடுமாறு எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. பெயர்களை சொன்னால் சித்திரவதை நிற்கும் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் நான் பொய் சொல்ல மறுத்தேன்,” எனக் கூறினார்.

மேலும், “24 நாட்கள் காவலில் வைத்தபோது என்னை கொடூரமாக சித்திரவதை செய்தனர். இதற்குப் பிரதான காரணமாக இருந்தவர் மும்பையின் முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங் தான். அவர்கள் சித்திரவதை செய்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனது நுரையீரல் கிழிந்துவிட்டது.

இது ஒரு திட்டமிட்ட வழக்கு. எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் எனை குற்றவாளியாக காட்ட முயற்சி செய்தனர்” என்றும் தெரிவித்தார்.

தனக்கு ஏற்பட்ட அநீதியைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் பதிவு செய்யும் வகையில் தற்போது ஒரு புத்தகத்தை எழுதி வருவதாகவும், விரைவில் அதனை வெளியிட உள்ளதாகவும் கூறிய பிரக்யா, “இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது என்பது காவியின் வெற்றி, மதத்தின் வெற்றி, சனாதன தர்மத்தின் வெற்றி, இந்துத்துவாவின் வெற்றி” என உருக்கமாக தெரிவித்தார். அவரது இப்பெயர்ப்பு தற்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.