அமெரிக்காவின் நியூயார்க் சப்வே (New York Subway) ரயில்களை விட இந்தியாவின் மும்பை மெட்ரோ ரயில்கள் மிகவும் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக அமெரிக்கப் பெண் பயணி ஒருவர் பாராட்டியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.
இந்தியாவில் தனது கணவருடன் வசித்து வரும் லிஸ் (Liz) என்ற அமெரிக்கப் பெண், ‘spicygori’ என்ற தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை மெட்ரோவில் முதன்முறையாகப் பயணித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். வெறும் 20 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில், இவ்வளவு சுத்தமான ரயில் நிலையங்களையும், பாதுகாப்பிற்கான பிளாட்பாரத் தடுப்புக் கதவுகளையும் (Platform Screen Doors) கண்டு அவர் வியந்துபோயுள்ளார்.
View this post on Instagram
மேலும், ரயிலுக்குள் ஏறியதும் மும்பையின் கடுமையான வெயிலுக்கு இதமான ஏசி வசதியைப் பாராட்டிய அவர், நியூயார்க் மெட்ரோவை விட மும்பை மெட்ரோ மிகத் தூய்மையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், மற்ற நாடுகளில் தான் பார்க்காத வகையில் பெண்களுக்கெனத் தனியாக இருக்கும் சிறப்புப் பெட்டியைப் (Women’s Compartment) பார்த்துப் பாராட்டிய அந்தப் பெண், “இந்த விசயத்தில் இந்தியாவைப் பார்த்து அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும்” என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் “எங்கள் மும்பைக்கு உங்களை வரவேற்கிறோம்” என்றும், “அடுத்ததாக டெல்லி மெட்ரோவிலும், மும்பையின் அண்டர்கிரவுண்ட் அக்வா லைனிலும் பயணித்துப் பாருங்கள்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோவை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
