உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் டர்ன்ஓவர் செய்யும் ஒரு நிறுவனத்திற்கு, 28 கோடி ரூபாய் ஜிஎஸ்டி (GST) வரி பாக்கியை வசூலிக்கச் சென்ற மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு அங்கே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எய்ம்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜ் பிரஜாபதி என்ற நபர், சாலையோரமாக ஒரு சிறிய பஞ்சர் கடை நடத்தி வருவது அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு 28 கோடி ரூபாய் ஜிஎஸ்டி பாக்கி இருப்பதை அறிந்த அதிகாரிகள், அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ராஜ் பிரஜாபதிக்குச் சம்மன் அனுப்பியுள்ளனர். அதற்கு அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராததால், அதிகாரிகள் நேரடியாக சனிக்கிழமை அன்று அவரது வீட்டிற்குச் சென்று விசாரித்தபோதுதான் இந்த மெகா மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து ராஜ் பிரஜாபதியிடம் விசாரித்தபோது, கடந்த 2024-ஆம் ஆண்டு தனது சகோதரியின் திருமணத்திற்காகத் தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபரிடம் அவர் கடன் வாங்கியுள்ளார்.
அந்தக் கடனுக்காக ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை அந்த நபர் வாங்கியதுடன், இரண்டு பேப்பர்களில் கையெழுத்துப் பெற்று ஒரு வீடியோவையும் எடுத்துள்ளார். ஏழைத் தொழிலாளியான ராஜ் பிரஜாபதியை ஏமாற்றி, அவரது ஆவணங்களை வைத்து ‘மெசஸ் கர் பிரைவேட் லிமிடெட் டெக்ஸ்டைல்’ (Mssrs Garh Private Limited Textile) என்ற பெயரில் போலி நிறுவனம் தொடங்கி, கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்து வரி ஏய்ப்பு செய்த அந்தப் பலே மோசடிப் பேர்வழி, தற்போது கம்பெனியை மூடிவிட்டுத் தலைமறைவாகிவிட்டான் என்பது அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட பஞ்சர் கடைக்காரர் அளித்த புகாரின் பேரில், உள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த முக்கியக் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
