கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இரண்டு பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவரும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் வழியாக ஒரு சிறுமியுடன் தோழமையுடன் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில், அந்தத் தோழி தனது வீட்டிற்கு வருமாறு மாணவிகளை அழைத்துள்ளார். இதனை நம்பி அவரது வீட்டிற்குச் சென்ற மாணவிகளை, அங்கு வந்த ஒரு சிறுவன் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், இக்கொடூரச் செயலைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துகொண்ட அந்தச் சிறுவர் கும்பல், இதுகுறித்து வெளியில் கூறினால் வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மாணவிகளை மிரட்டியுள்ளது. இதனால் அச்சமடைந்த மாணவிகள் நீண்ட நாட்களாக இந்தத் துயரத்தை வெளியில் சொல்லாமல் மறைத்து வந்துள்ளனர். சமீபத்தில் மாணவிகளின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு சந்தேகமடைந்த பெற்றோர்கள், அவர்களிடம் கனிவாக விசாரித்தபோது இக்கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
