குஜராத் மாநிலம் அகமதாபாத் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அந்த போஸ்டர்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமையை தவிர்க்க வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் போக்குவரத்து போலீஸ் சார்வில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர்களில் நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் பார்ட்டிகளில் பங்கேற்காதீர்கள்.
நீங்கள் பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படலாம். இருட்டான ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு பெண் நண்பர்களை ஆண் நண்பர்கள் அழைத்துச் செல்ல வேண்டாம். அங்கு உங்கள் பெண் நண்பர்கள் பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் என்ன ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற பாலியல் வன்கொடுமையை தவிர்க்க பெண்கள் வீட்டிலேயே இருக்கும்படி குஜராத் போக்குவரத்து காவல்துறையினர் ஒட்டிய போஸ்டர்கள் மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அதேவேளை சாலை போக்குவரத்து தொடர்பாக போக்குவரத்து காவல்துறை சார்பில் நோட்டீஸ் ஒட்ட தனியார் தொண்டு அமைப்பிற்கு அனுமதி கொடுக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு அனுமதியின்றி பெண்கள் பாதுகாப்பு குறித்து சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம் பெற்ற போஸ்டர்களை ஒட்டியதாகவும் அகமதாபாத் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட தொண்டு அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
