அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்று அதிகாலை பாகிஸ்தானுடன் புதிய எண்ணெய் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு முன், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கான காரணமாக, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா மிக அதிக வரிகளை விதிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளது என்றும், வர்த்தக தடைகள் காரணமாக அமெரிக்கா-இந்தியா உறவுகள் சிக்கலான நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய ஒப்பந்தம், முக்கியமாக கச்சா எண்ணெய் வளங்களை மேம்படுத்தும் வகையில் அமைகிறது. பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா சந்திக்க கூடிய வகையில் ஆராய்ச்சி செய்யும் பணியை இவர்கள் இணைந்து மேற்கொள்ள உள்ளனர். எதிர்காலத்தில் பாகிஸ்தான் இந்த எண்ணெய்களை இந்தியாவுக்கும் விநியோகிக்க வாய்ப்பு உள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானை ஆதரிக்கும் வகையில் டிரம்ப் எடுத்துள்ள நடவடிக்கை இந்திய அரசியல் வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இணைந்து புதிய எரிசக்தி நிறுவனத்தை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனம் பாகிஸ்தானில் எண்ணெய் உற்பத்தியை மேம்படுத்தும் பணியில் ஈடுபடும். இதனால் பாகிஸ்தானுக்கு புதிய வருமான வாய்ப்பு உருவாகும் என்றும், அமெரிக்காவின் தொழில்நுட்ப பங்களிப்பும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பான முழுமையான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியா மீது வரி விதித்தது, ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொள்ளும் எண்ணெய் மற்றும் ராணுவ ஒப்பந்தங்களை குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும், இது போன்ற சூழ்நிலைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை பாதிக்கக்கூடும் என வல்லுநர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். அதே நேரத்தில், பாகிஸ்தான் மீது டிரம்ப் காட்டும் ஆதரவு இந்தியாவுடன் அமெரிக்கா கொண்டுள்ள பழமையான நட்புறவை பாதிக்கக்கூடும் என்பதையும் வெளிப்படையாகக் காட்டுகிறது.