மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பிச்சைக்காரர் ஒருவர் கலெக்டரிடம் வந்தபோது, அவர் அளித்த புகார் அதிகாரிகளை மட்டுமல்ல, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தனது வாழ்க்கையில் சந்திக்கின்ற ஒரு விசித்திரமான பிரச்சினையை நியாயமாக சமாளிக்கக் கலெக்டரிடம் நேரில் புகார் தெரிவித்தார் அந்த நபர் பெயர் ஷஃபிக் ஷேக். ஷஃபிக் கூறியதாவது, “எனக்கு இரண்டு மனைவிகள் இருக்காங்க – ஒருவர் ஷபானா, இன்னொருவர் ஃபரிதா. நானே அவர்களை பராமரிக்கிறேன்.
ஒரு நாளைக்கு ரயில்களில், பேருந்துகளில் பிச்சை எடுத்து ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை சம்பாதிக்கிறேன். ஆனா இருவரும் தினமும் சண்டையிடுறாங்க. இந்த சண்டையால் நான் வேலைக்குப் போக முடியாம, என் காசு வருமானம் பாதிக்கப்படுகிறது.” அதேசமயம், அவர், “நான் யாரையும் விட்டுச் செல்லவே இல்லை. இருவரையும் ஒரே வீட்டில் வைத்துத்தான் வாழ விரும்புகிறேன். ஆனால் அவர்கள் சும்மா இருக்க மாட்டாங்க” என்று கூறினார்.
இந்த விசித்திரமான புகாரை கேட்ட கலெக்டர் ரிஷப் குமார் குப்தா, முதல் நொடியிலே சற்று நிலைதடுமாறினார். பின்னர் ஒரு புன்னகையுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையிடம் இந்த பிரச்சனையைப் பொறுப்பாக கையாண்டு, இரு மனைவிகளையும் அழைத்து ஆலோசனை வழங்க வேண்டுமெனக் கூறினார்.
ஷஃபிக் 2022-ல் ஷபானாவையும், 2024-ல் ஃபரிதாவையும் திருமணம் செய்துள்ளார். இவரது உணர்வுகள் வலியுறுத்தப்பட வேண்டியனவேயாக இருந்தாலும், அவரது சொந்த வாழ்க்கை பிரச்சனையை கலெக்டர் வழியாகத் தீர்க்க முயற்சித்த விதம் சமூகத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதிகாரிகள் இரு மனைவிகளுடனும் ஆலோசனை நடத்தி, இந்த சண்டைகளால் பிச்சைக்காரரின் “தொழில்” பாதிக்கப்படாத வழியைத் தேடுகிறார்கள்.
