ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் இன்று அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், ரஷியாவின் கிழக்குப் பகுதியில் கடலோரங்களில் ஏற்பட்டது. இதன் தாக்கத்தால் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிச் சென்றனர். நிலநடுக்கம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அதனுடன் தொடர்ச்சியாக சுனாமி அலைகளும் எழுந்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தைக் தொடர்ந்து, ஜப்பான், ஹவாய், சாலமன் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் சுனாமி எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சில கடலோர பகுதிகளில் 3 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கடலோர மக்கள் பெரும் பதட்டத்துடன் பாதுகாப்பான இடங்களுக்குப் சென்றுள்ளனர். இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் இந்த நிலைமையை கண்காணித்து வருகிறது. அவசர தேவைக்கு, +1-415-483-6629 என்ற எண்ணை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அவசரநிலை மேலாண்மை மையத்தின் அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.