ராஜஸ்தானின் டோங்க் நகரில் இயங்கும் பனஸ்தளி வித்யாபீடம் எனும் 90 ஆண்டு பாரம்பரியமுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மட்டுமே கல்வி பெற அனுமதிக்கப்படுகிறார்கள். கலாசாரத்துடன் கூடிய நவீன கல்வியை வழங்கும் நோக்கில் இந்த நிறுவனம் இயங்கிவந்தாலும், தற்போது ஒரு அதிர்ச்சிக்குறிய சம்பவம் காரணமாக கவனத்துக்குவரியுள்ளது.

அரியானாவைச் சேர்ந்த எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு மாணவி ஒருவர், தங்கும் விடுதி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

புகாரின் படி, விடுதி கொண்டாட்டம் என்ற பெயரில், சக மாணவிகள் மாணவிக்கு போதைப்பொருள் கலந்த குளிர்பானம் மற்றும் கேக் கொடுத்துள்ளதாகவும், பின்னர் அவரை தாக்கி வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தம் அடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுபற்றி போலீசாரின் ஆரம்ப விசாரணையில், இது ராகிங் சம்பவம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ராம்ஜி லால் வர்மா தெரிவித்ததாவது, “புதிய மாணவிக்கு பழைய மாணவிகள் ராகிங் கொடுத்துள்ளதாக ஆதாரம் கிடைத்துள்ளது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார். ராகிங்கிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தாலும், இதுபோன்ற கொடுமைகள் பல கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.