பாகிஸ்தான் உடன் போர் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி நல்லிணக்கத்திற்கு பாதையை மேற்கொள்வது பற்றி பேசுங்கள் என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்கள் உங்களுடைய எதிரிகள் கிடையாது. நாங்கள் கண்ணியத்துடன் கூட அமைதியை விரும்புகிறோம். நட்பு மூலமாக அமைதியை விரும்புகிறோம். நாங்கள் போர் தொடர விரும்பவில்லை. பகல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது காஷ்மீரில் என்ன நடந்தது என்பதை விளக்குவதற்காக நீங்கள் எம்பிக்கள் குழுவை உலக நாடுகளுக்கு அனுப்பினீர்கள்.

மோதலின் போது காஷ்மீர் தான் கஷ்டங்களை எதிர்கொண்டது. எனவே காஷ்மீர் பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்த கோரவில்லை என்றால் வேறு யார் கோருவார்கள். நம்முடைய நாடு முன்னோக்கி செல்ல வேண்டும் என்றால் போரை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை குறித்து பேச வேண்டும். உலகில் உங்கள் திறமையை நிரூபிக்கவும், சீனாவை வெல்லவும் விரும்பினால் ஒரு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு நல்லிணக்க பாதையை மேற்கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.