சின்னத்திரையிலும், சில திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக பிரபலமான நடிகை ப்ரஹர்ஷிதா, தற்போது நடிப்பிலிருந்து விலகி திருமணமாகி செட்டில் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.

2002-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘வேலன்’ என்ற சீரியலில் கடவுள் முருகன் வேடத்தில் நடித்த இவர், அந்த வேடத்தில் நடித்ததற்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

இந்த சீரியல், முருகப்பெருமானின் கதைகளையும், அவதாரங்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் பழம்பெரும் நடிகர்கள் ஜோதி லட்சுமி, எம்.என். நம்பியார், சீதா, வியட்நாம் வீடு சுந்தரம், சிட்டி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

அவர்களுடன் இணைந்து, வேலன் மற்றும் முருகன் என இரட்டை வேடங்களில் சிறுவயதில் நடித்த ப்ரஹர்ஷிதாவை, பலர் உண்மையான முருகன் என்று நம்பும் அளவிற்கு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இந்த சீரியலுக்குப் பிறகு, ப்ரஹர்ஷிதா ‘ராஜ ராஜேஸ்வரி’, ‘செல்வி’ உள்ளிட்ட மற்ற சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் நடிப்பில் 2005-ல் வெளிவந்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தில், பொம்மி என்ற குட்டி பாப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

குறிப்பாக, ‘அத்திந்தோம் திந்தியம்’ பாடலுக்கான அவரது நடனமும், முக பாவனைகளும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு ப்ரஹர்ஷிதா திரைப்படங்களிலும், சீரியல்களிலும் இடம் பெறாமல், திடீரென நடிப்பிலிருந்து விலகினார்.

தற்போது வளர்ந்த ப்ரஹர்ஷிதா, திருமணமாகி அமைதியான குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகியுள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது, ஒரு வயதான பாட்டி தன்னை ‘முருகன்’ என்று நினைத்து தொலைபேசியில் பேசிய வீடியோவை, ப்ரஹர்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டது. இளம் வயதில், சின்னத்திரையில் தெய்வீகக் கதாபாத்திரத்தில் மக்களை ஈர்த்த ப்ரஹர்ஷிதா, தற்போது நடிப்பை விட்டு அமைதியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு உணர்ச்சிமூட்டும் தகவலாகும்.