உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டா மாவட்டத்தில் கலிஞ்ஜர் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பக்கத்து வீட்டு 20 வயது இளைஞர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனால் பயந்து போன சிறுமி ஓடி வந்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர். அதனிடையே கலிஞ்சரில் உள்ள காட்டுப்பகுதியில் இளைஞர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் நேற்றிரவு காட்டுப் பகுதியில் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த இளைஞர் துப்பாக்கியால் காவல்துறையினர் ஒருவரை சுட முயற்சித்தார். அதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
அந்த தாக்குதலில் இளைஞரின் இரு கால்களிலும் குண்டுகள் பாய்ந்தது அதன் பின் நகர முடியாமல் அதே இடத்தில் இளைஞர் கீழே விழுந்தார். பின்னர் காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இளைஞரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
